Nagarathar History
Nagarathar - History
நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் வணிகச் சமுதாயத்தினர் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். வியாபார நிமித்தம் உலகின் பல நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சென்ற இவர்களின் வம்சத்தினரை இன்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் காணலாம். நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது இந்து சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. சமையலில் தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்தவர்கள் இவர்கள். சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. மன்னர் அளித்த 96 ஊர்களின் வட்டாரத்தில் மொத்தம் 9 சிவன் கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது. செட்டிநாடு என்று சொல்வழக்கில் இந்த 96 கிராமங்கள் அமைந்த பகுதி தனித்த கட்டிடக்கலையையும், பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது ஆலைத்தொழில், மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர்.
- Courtesy - Wikipedia